சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 7 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான வசதி உள்ளது. இதனால் நெல்மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்க இடமின்றி மழையில் நனைந்து விரயமாகும் அவல நிலையே உள்ளது.5.13 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 5.66 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள சூழலில் போதுமான இடவசதி இன்றி நெல்மூட்டைகள் மழையினால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதி, தார்பாய்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் இன்றி வருடந்தோறும் விவசாயிகள் இழப்பினை சந்தித்து வருகின்றனர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 840 கோடி மதிப்புள்ள கொமுதல் செய்யப்பட்ட நெல் பாதுகாக்கப்படாமல் வீணடிக்கப்பட்டு உள்ளது. கொள்முதல் நிலையங்கள் மற்றும் கிடங்குகளில் நெல்மூட்டைகள் திறந்த வெளிகளில் வைக்கப்படுவதால் மழையில் நனைந்து சேதமாகிறது. டிரையர் எந்திரங்கள் இல்லாத நிலையில் நெல் கொள்முதல் செய்யும் முன்பே முளைத்து வீணாகி விடுகிறது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் முளைத்து வீணாகி உள்ளது.
கடுமையாக உழைத்து கடன் வாங்கி சாகுபடி செய்து அதன் விளைச்சல் பலன் அளிக்காததால் மன உளைச்சலுக்கும்,பண இழப்பிற்கும் உள்ளாகி விவசாயிகள் வேதனையின் விளிம்பில் உள்ளனர்.அரசுக்கும் நிதி இழப்பும் ஏற்படும் நிலையில் இதனை போக்க இதுவரை அக்கறை காட்டியதாக தெரியவில்லை. சட்டீஸ்கர், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசு வழங்ககூடிய குவிண்டாலுக்கு ரூ2369 உடன் 731 சேர்த்து ரூ 3100 வழங்கிவரும் நிலையில் தமிழக அரசு வெறும் 131 மட்டும் கூடுதலாக சேர்த்து ரூ 2500 மட்டுமே வழங்கி வருகிறது.
அதிலும் விவசாயிகள் விளைவித்த நெல்லை பாதுகாப்பாக வைக்க போதுமான கிடங்குகள், கொள்முதல் நிலையங்களில் தார்பாய்கள், உலரவைப்பதற்கான டிரையர் எந்திரங்கள் இன்றி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையால் விளைவித்ததை விட அதனை விற்பதற்கு அதிக வேதனையை விலசாயிகள் சந்தித்து வருகின்றனர். நெல்மூட்டைகளுக்கு ரூ 40 முதல் 60 வரை கொள்முதல் நிலையங்களில் லஞ்சமாக பெறப்படுவதாக புகார்கள் வெளிவருகின்றன.
தமிழக அரசு மதுபானங்களை காக்கும் வகையில் மாவட்டங்களில் குடோன் உள்ளிட்ட வசதிகளை செய்து உள்ள நிலையில் மக்களின் பசியினை போக்கும் நெல்மணிகளை பாதுகாக்க தவறுவது விவசாயிகளுக்கு மட்டுமல்ல வாழும் அனைவருக்கும் செய்யும் துரோகமாகும். விவசாயத்தை மட்டுமல்ல விவசாயிகளையும் வாழவைக்க வேண்டிய அரசு பாராமுகமாய் இருக்கும் நிலை மாற வேண்டும். தொடரும் விவசாயிகள் துயரம் எப்போது விலகும்? என்ற விடுகதைக்கான பதில் ஆட்சியாளர்களுக்கு மட்டுமே தெரியும் பரமரகசியம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply