சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மலைவிளைக்கு வந்த சோதனை, மக்கள் ஆற்றில்இறங்க முடியாமல் வேதனை.

தங்கள் ஊரில் ஆறு இல்லையே ஆசை தீர குளிப்பதற்கு என்ற ஏக்கம் இருக்கும் பலருக்கு…ஆனால் ஆறு இருந்தும் நீராட முடியாத நிலையில் பரிதவிப்பு மலைவிளை கிராம மக்களுக்கு…. இப்பகுதியில் பறளியாற்றின் குறுக்காக செல்லும் சாலை பிரசித்தி பெற்ற மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு செல்லும் முக்கிய பாதையாகும். அயக்கோடு ஊராட்சி முள்ளு விளை பகுதியில் இருந்து வேர்கிளம்பி பேரூராட்சி மலைவிளை செல்லும் சாலையில் பரளியாற்றில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 4 1/2 கோடி செலவில் பாலம் புதிதாக கட்டப்பட்டு கடந்த 22ந்தேதி தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இப்பாலம் கட்டப்படும் முன்னர் அருகாமையில் உள்ள பாதை வழியாக ஆற்றில் இறங்கி இப்பகுதி மக்கள் குளித்து வந்தனர். தற்போது இப்பாலம் கட்டப்பட்ட பின்னர் ஆற்றில் இறங்க படித்துறையோ சப்பாத்தோ எதுவும் அமைக்கப்படவில்லை. பாலத்தின் இருபுறமும் உள்ள ஆற்றின் கரையோர பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது. இதனால் மக்கள் இவ்வழியாக செல்ல இயல்வதில்லை. இதனால் மலைவிளை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆற்றை கரையில் இருந்து கண்டு களிக்கலாமே தவிர கால் நனைக்க முடிவது இல்லை.

இப்பகுதியில் அமைக்கப்பட்டு புதிய பாலம் 71/2 மீட்டர் வீதியில் உள்ளது. ஆனால் இருபுறங்களிலும் உள்ள சாலை பகுதிகள் 4 1/2 மீட்டர் வீதியில் உள்ளதால் இவ்வழியாக பேருந்து இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இவ்வழியாக வரும் வாகனங்களும் குறிப்பிட்ட பகுதிகளை மிகுந்த சிரமத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை சீரமைத்தால் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக இப்பகுதி திகழும்.அதற்கு முதல்படியாக தேவை இங்கு படி அமைப்பதுதான்….

அதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட நீர்நிலை ஆக்கிமிப்புகளை பரளியாற்றின் இப்பகுதியில் அகற்றுவதோடு இப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திடும் விதமாக படித்துறை மற்றும் சப்பாத்து அமைத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொதுசெயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர்
T.குடிந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் P.சந்திரா, மனநல பாதுகாப்பு அணி செயலாளர் S. அருள்ராஜ், திருவட்டார் ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன், வேர்கிளம்பி பேரூர் அமைப்பு செயலாளர் D.ஷாஜி பெனிசிட் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *