சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் 70 மாணவர்கள் அருகில் உள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ந் தேதி விடுதியில் தங்கி பயின்ற ஒரு மாணவனை மற்ற மாணவர்கள் தாக்கி நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் 3 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கவனகுறைவாக இருந்ததாக விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டு உள்ளார். மிருகத் தனமான மனிததன்மை அற்ற இத்தகைய செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
கடந்த 1996ல் பொன் நாவரசு கொலைக்கு பின் தமிழக அரசு 1997 ல் ராக்கிங் தடுப்பு சட்டம் கொண்டுவந்தது. இதன்படி ராக்கிங் செய்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை/10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம். கல்லூரி நிர்வாகம் புகார் அளிக்க தவறினால் அவர்களும் தண்டனையில் இருந்து தப்ப இயலாது. இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் 2015ல் 25 ஆக இருந்தது 2018ல் 43 சம்பவமாக உயர்ந்தது. இதன்மூலம் இத்தகைய சட்டம் அமலாக்கத்தில் உள்ள குறைபாடு தென்ளத் தெளிவாக தெரிகிறது.
இந்தியா அளவில் 2021 ல் 511 ராக்கிங் புகார்கள் வந்த நிலையில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளதாக ஒரு சர்வே சொல்கிறது. இதன்மூலம் இந்த விஷயத்தில் நமது அக்கறையின்மையை அம்பலபடுத்துகிறது. ராக்கிங் உடல், மன ரீதியான பாதிப்புகளோடு மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மன உளைச்சலில் மாணவர்கள் இறப்பு வரையில் இது செல்ல காரணம் ஆகிறது. இத்தகைய மனித உரிமை மீறலை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் அவசர தேவையாக உள்ளது.
அனைத்து கல்லூரிகளிலும் ஆன்டிராக்கிங் கமிட்டி அமைக்க வேண்டும். புதிய மாணவர் சேர்க்கையின் போது அஃபிடவிட் பெற வேண்டும் என யு.ஜி.சி தெரிவித்து உள்ளது. இது முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை. எனவே இத்தகைய கமிட்டி வலுப்படுத்துவதோடு புதிய மற்றும் சீனியர் மாணவர்கள் இணைந்து நடத்தும் கலந்துரையாடல், கவுன்சில் நிகழ்வுகள் நிகழ்த்தபட வேண்டும். பாதிக்கபட்டவர்கள் புகார் அளிக்க ஏதுவாக புகார்பெட்டி/மொபைல் ஆப் அமைக்க வேண்டும்.
விடுதிகளில் சிசிடிவி கேமரக்கள் அமைத்தல், இரவு நேர கண்காணிப்பு அதிகரிப்பு. மாணவர்கள் மத்தியில் Senior-Junior mentorship, ராக்கிங் புகார்கள் மீது கடுமையான தண்டனை, போதிய விழிப்புணர்வு உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். பாதிப்பிற்கு உள்ளாகும் மாணவர்கள் புகார் அளிக்க தைரியம் ஏற்படுத்துவதோடு ஆரோக்கியமான சமூகம் உருவாக்கத்தில் நமது ஒவ்வொருவர் பங்கும் உள்ளது என்பதை உணர்ந்து நாம் முயன்றால் தொடரும் ராக்கிங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply