சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கோயம்புத்தூர்- பீளமேடு பகுதியில் அரசு உதவிபெறும் கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்த மாணவர் அகிலன் 21.10.26 அன்று பள்ளிசென்று திரும்பிய நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இருமாதங்களுக்கு முன் வகுப்பாசிரியர் விஜயகுமார் கல்வி உதவிதொகை பெற யார் எல்லாம் தாழ்த்தபட்ட மாணவர்கள்? என்றும் யார் எல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள் என கேட்டும் எழுந்து நிற்க சொல்லி உள்ளார். எழுந்து நின்ற அகிலனை சக மாணவர்கள் சாதிப் பெயரை சொல்லி திட்டியும், ஒதுக்கியும் வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெற்றோர் தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலில் மாணவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே சாதிப்பாகுபாட்டை உருவாக்கி பிஞ்சுகள் நெஞ்சில் நஞ்சை விதைப்பது கண்டிக்கதக்கது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்த 9.8.2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது சகோதரி மாற்று சமூகத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு இதுபோல் சாதி அடிப்படையில் பாகுபாடு மற்றும் வன்முறை நடப்பதை தடுக்கும் விதத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. இக்குழு 18.6.2024 அன்று 680 பக்க அறிக்கையினை முன்னாள் முதல்வர். மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.
பள்ளி பெயர்களில் சாதிப் பெயர்களை நீக்கி அரசு பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து வகை அரசுப்பள்ளிகளையும் (கள்ளர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகள் உட்பட) பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். மாணவர்கள் வண்ணக் கயிறுகள், மோதிரங்கள், நெற்றி திலகம் உள்ளிட்ட சாதி அடையாளங்கள் அணிவதை தடைசெய்திட வேண்டும். மாணவர்களின் சாதி விபரங்களை ரகசியமாக வைத்து இருப்பது, அகரவரிசையில் இருக்கை ஏற்பாடு, ஆசிரியர் சாதியை குறிப்பிட்டு அழைப்பதை தடை செய்வது, ஆசிரியர்களை அவ்வப்போது இடமாற்றம் செய்வது, அந்தந்த பகுதியில் ஆதிக்கசாதியினரை தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகளாக நியமிக்காமல் இருப்பது உள்ளிட்டவற்றை பரிந்துரை செய்தது.
ஆசிரியர்களுக்கான நடத்தை விதிமுறை, சமூக நீதி குறித்த கட்டாய நோக்குநிலை பயிற்சி, ஆசிரியர் பயிற்சி பாடத்திட்ட மாற்றம், சமூகநீதி மாணவர் படை அமைப்பது, சமூக உள்ளடக்கம் மற்றும் சாதி பாகுபாட்டை ஒழிப்பதற்கான சிறப்பு சட்டம் இயற்றுவது, கண்காணிப்பு குழுக்கள், குறைதீர்க்கும் பெட்டி அமைப்பு, மதிப்பு கல்வி வகுப்புகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை இக்குழு பரிந்துரை செய்தது. இருப்பினும் இதனை முழுமையாக அமல்படுத்தப்படாமல் குழு அறிக்கை கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. இப்பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு இருந்தால் சாதி அடையாளங்கள் இல்லாத சமத்துவ சூழல் உருவாகி இருக்கும்.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமூகநீதி குறித்த விழிப்புணர்வு மற்றும் மனப்பான்மை மாற்றம் ஏற்படும். நிறுவன அளவிலான கண்காணிப்பு மற்றும் குறைதீர்க்கும் அமைப்புகள் உருவாகும். நீண்ட காலத்தில் கல்வித் துறையில் சாதியற்ற சமூகத்தை நோக்கி நகர்வதற்கு உதவும். இது தமிழ்நாட்டின் சமூகநீதி பாரம்பரியத்தை வலுப்படுத்தும். ஆரோக்கியமான சமூகம் உருவாகிட மாணவர்கள் சாதி அடிப்படையில் வன்முறை மற்றும் பாகுபாட்டில் பிரிவினைக்கு உள்ளாவது தடுக்கப்பட்டாக வேண்டும். அதன் முன்னெடுப்பாக நீதிபதி.சந்துரு குழு பரிந்துரைகள் அமல்படுத்திட தமிழக அரசு உரியநடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.