Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

ஆசாரிபள்ளம் அருகே கல்மடம் இடிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தபின்பும் கண்டுகொள்ளாதது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

ஆசாரிபள்ளம் அருகே இடிக்கப்பட்ட பழமையான கல்மடத்தை மீண்டும் அமைத்து பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க TNSPI கோரிக்கை

குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம்– பெருஞ்செல்வவிளை சாலையில் வேம்பனூர் குளம் அருகில் இருந்த சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் மண்டபம் கடந்த 12.7.2025 அன்று பொன்.ரெத்தின பாய் என்பவரால் ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக குருந்தன்கோடு வருவாய் ஆய்வாளர் மந்திரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் 13.7.25 அன்று ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.(முதல் தகவல் அறிக்கை எண்.154/25).

குமரியினை ஆண்ட சேர மன்னர்கள் மருங்கூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு குமாரகோவில் செல்லும் வழியில் இப்பகுதியில் இளைப்பாறி செல்ல இக்கல்மடம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வழியாக செல்வோர் இக்கல் மடத்தில் இளைப்பாறி சென்ற நிலையில் ராம்சார் நீர்நிலைப் பகுதியான வேம்பனூர் குளத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் இக்கல்மடம் திகழ்ந்தது. ஆனால் சுயநல நோக்குடன் பாரம்பரிய இக்கல்மடம் இடிக்கப்பட்டதால் வாழும் சாட்சியாய் இருந்த கல்மடம் இன்று கட்டாந்தரையாய் காட்சி அளிக்கிறது.

குமரி மாவட்டத்தில் ஆயிரகணக்கான கல்மடங்கள் இருந்த நிலையில் பராமரிப்பின்றி, பாழடைந்து, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, அழிந்து போனதால் தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாய் கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பரின்றி உள்ளது. கல்குளம் தாலுகா பகுதியில் அதிகமாக இம்மடங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தாழக்குடி, சீதப்பால், செண்பகராமன்புதூர், விவேகானந்தபுரம், கல்லு விளை, மகாதானபுரம், ஈத்தங்காடு, வடிவீஸ்வரம், தோட்டியோடு, களியங்காடு, திருவிதாங்கோடு, புலியூர்குறிச்சி, வேர்கிளம்பி, நட்டாலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் எஞ்சி நிற்பவை அழிவின் விளிம்பில் உள்ளன.

வரலாற்று கருவூலங்களாக பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய கல்மடங்கள் பல்வேறு செய்திகளை சொல்பவை. பல்வேறு மடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் இதுவரை ஆய்வு செய்யப்படாத நிலையில் தங்கள் ஆயுளை இழந்து உள்ளன. மாவட்டத்தில் சில பகுதிகளில் இம்மடங்கள் குப்பை கிடங்காகவும், வணிக நிறுவனங்களாகவும், வழிபாட்டு தலங்களாகவும் மாறி உள்ள சூழலில் பல இடங்களில் மடங்களில் ஆக்கிரமித்து உள்ள மரங்களின் வேர்களால் தன் உறுதித்தன்மையினை இழந்து இறுதிகாலத்தில் நிற்கிறது. நமது அலட்சியத்தாலும், அக்கறை இன்மையாலும், சுயநலப் போக்கினாலும் இக்கல்மடங்கள் தங்கள் தடயங்களை/இடங்களை, இழந்து வருகின்றன.

இச்சூழலில் ஆசாரிபள்ளம் பகுதியில் வரலாற்று சின்னமாக நின்ற கல்மடம் இடிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த போதும் இன்னும் இடித்து அகற்றிய குற்றவாளிகள் மீது இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோல் இடிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் கல்மடம் நிறுவப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் எந்தவித பணிகளும் மேற்கொள்ளாததால் குறிப்பிட்ட பகுதி கல் மண்டப இடிபாடுகளுடன் காட்சி அளிக்கிறது. எனவே இக்குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மீண்டும் குறிப்பிட்ட பகுதியில் கல்மடத்தை நிறுவிடவும், எஞ்சிய கல்மடங்களை பராமரித்து, பாதுகாக்கவும் அவற்றின் அழிவை தடுக்கும் வகையில் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவும் அரசு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

வேம்பனூர் குளம் அருகே இடிக்கப்பட்ட பழமையான கல்மடத்தை மீண்டும் அமைத்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரியக் கல் மண்டபங்களைப் பாதுகாக்க சமூக பொதுநல இயக்கம் கோரிக்கை.
கல்மடம் இடிப்பு, பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு, குமரி மாவட்ட பாரம்பரியம், தமிழக பாரம்பரியப் பாதுகாப்பு, சமூக பொதுநல இயக்கம்