சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தில் சுமார் 50 லட்சம் வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். கட்டுமானம், ஜவுளி, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக தொழிலாளர் நலத்துறையின் ஆன். லைன் போர்டல் மூலம் சுமார் 12.17 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளனர். ஒடிசா தொழிலாளர்கள் 2.89 லட்சம் பேர், பீகார் 2.51 லட்சம் பேர், ஜார்கண்ட் 1.95 லட்சம் பேர், மேற்குவங்கம் 1.91 லட்சம் பேர் மற்றும் உத்தரபிரதேசம், அசாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் பதிவு செய்து உள்ளனர்.
தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு என கடந்த 2025/டிசம்பரில் அரசு சிறப்பு முகாம்களை ஏற்படுத்தியது. இருப்பினும் முழுமையாக இத்தொழிலாளர்கள் பதிவு செய்யவில்லை. 2026/செப்டம்பரில் சட்டமன்ற அறிவிப்பில் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ 14 கோடி செலவில் தற்காலிக தங்குமிடம் அமைக்கப்படும் எனவும் தொழிலாளர்கள் கூடும் இடங்களில் 50 வசதி மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த பதிவு முழுமையாக இல்லாததால் இத்திட்டங்களில் அவர்கள் பயன்பெறாத நிலையே உள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்கள் வாழும் மற்றும் பணிபுரியும் உரிமை அரசியல் அமைப்புச் சட்டப்படி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கான சட்ட உத்தரவாதம் இருக்கிறது. பணியில் விபத்து ஏற்பட்டால் வேலை அளிப்பவர் இழப்பீடு தர வேண்டும். கட்டுமான பணியின் போது ஏற்படும் மரணம் ஏற்பட்டால் தொழிலாளர்கள் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல ரூ 1 லட்சம் நிவாரணம், பாதுகாப்பு உபகரணம் என பல்வேறு பணி பாதுகாப்பு அரசாலும், சட்டத்தாலும் அளிக்கப்பட்டு உள்ளது.ஆனால் அமலாக்கம் என்பது பலவீனமாகவே தென்படுகிறது.
பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர் மூலம் வருவதால் அவர்கள் தொழிலாளர்கள் குறித்து பதிவு செய்யவோ, அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வாங்கி கொடுக்கவோ அக்கறை காட்டுவது இல்லை. இதுபோல் தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்களும் இதன் முக்கியத்துவத்தை உணராமல் அலட்சியத்தாலும், அறியாமையாலும் உள்ளதால் இவர்களுக்கு தொழில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அரசும் இவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியினை முழுமையாக மேற்கொள்ளவில்லை. இது பல்வேறு குற்ற செயலில் ஈடுபடுவோர் கண்டுபிடிப்பதில் பின்னடைவை ஏற்படுத்துவதோடு பாதிக்கபட்டவர்கள் நிவாரணம் கிடைக்க இயலாத நிலையினையும் ஏற்படுத்துகிறது.
இத்தகைய சூழலை சாதகமாகக் கொண்டு தொழில் அளிப்பவர்கள் இவர்களிடம் உழைப்பை சுரண்டுவதோடு, வேலைக்கு ஏற்ற சம்பளம் வழங்காமல் ஏமாற்றும் நிலையும் ஏற்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் ஒப்பந்த மற்றும் தினக்கூலி வேலையில் இருப்பதால் உரியமுறையில் தங்களை பதிவு செய்யாததால் சட்ட பாதுகாப்பும், இழப்பீடும் கிடைக்காத நிலையே நீடித்து வருகிறது. எனவே புலம் பெயர் தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாத்திடும் வகையில் இத்தொழிலாளர் குறித்த விபரத்தை கணக்கெடுத்து அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு அளிப்பதை தமிழக அரசு உறுதிசெய்திடவேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

