சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள நிட்சேப நதி மற்றும் காந்தி அஸ்தி நினைவிடம்

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நிட்சேப நதி தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 11/2 லட்சத்திற்கும் மேலான விவசாய விளைநிலங்கள் செழிக்க உதவியது. கரிவலம் வந்தநல்லூர் வழியாக வைப்பாறை அடைந்து கடலில் கலக்கும் இந்நதி கங்கை நதியினைப் போல புனித நதியாக கருதப்படுகிறது. இதனால் மகாத்மா காந்தியின் அஸ்தியை 7 இடங்களில் கரைக்கப்பட்ட நிலையில் நிட்சேப நதியிலும் கரைக்கப்பட்டது. இந்நதியில் காந்தியின் அஸ்தி 12.2.1948ல் கரைக்கப்பட்டது. இதற்கான நினைவு கல்வெட்டு வினோபாஜி அவர்களால் 4.4.1957 ல் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழக-கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக உடைந்தது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட அணை சீர்செய்யப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டது. இதன் பின் இதுவரையில் சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் கடந்த 40 ஆண்டுகளாக நிட்சேப நதியில் நீர்வரத்து தடைபட்டது. இதனால் குறிப்பிட்ட நதிப்படுகையில் குப்பைகள் கொட்டப்பட்டு நீர்நிலை கழிவு கால்வாயாக மாறிப்போனது. மேலும் வழிநெடுக கருவேல மரங்கள் புதர்காடாக வளர்ந்து காட்சி அளிக்கிறது.

இந்நதிக்கரையில் உள்ள பால்வண்ண நாதர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடக்கக் கூடிய தீர்த்தவாரி திருவிழாவும் ஆற்றில் நீர் இல்லாத நிலையில் பல ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் உள்ளது. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் விவசாயத்திற்கு அடிப்படையாகவும், பல கிராமங்களின் நீராதாரமாகவும் திகழ்ந்த நிட்சேப நதி தனது அடையாளத்தை இழந்து அழிவின் விளிம்பில் உள்ளது.

நதியின் பரப்புகள் முட்புதர்செடிகள் ஒருபுறம் ஆக்கிரமிக்க மறுபுறம் கழிவு குப்பைகள் ஆக்கிரமிக்க, பல பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்க நிட்சேப நதி காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. சுகாதார சீர்கேடு, விவசாயிகளுக்கு வாழ்வாதார பாதிப்பு, நிலத்தடி நீர்மட்டம் சரிவு என இதன் மூலம் பல்வேறு துன்பங்களை மக்கள் சந்தித்து வந்த போதும் இந்நதியினை மீட்டெடுக்க எவரும் முன்வராதது வேதனை தருவதாகவே உள்ளது.

ஓர் ஜீவநதி இன்று தனது ஜீவனை இழந்து பல ஜீவன்களின் தாகத்தை தணிக்க இயலாமல் இறந்து வருகிறது. மகாத்மா காந்தி நினைவிடத்தை குப்பை மேடுகளுக்கு நடுவில் தேட வேண்டிய அவலமே இங்கு உள்ளது. எனவே குறிப்பிட்ட நதியின் மூலம் விவசாயிகளும், கிராம மக்களும் பயன்பெறும் வகையில் நீர்வரத்திற்கான தடைகளை நீக்குவதோடு, கழிவு குப்பைகள் இங்கு கொட்டாமல் தடுத்து, ஆக்கிரமிப்புகளை, முட்புதர்களை அகற்றி நிட்சேப நதிக்கு புத்துயிர் அளித்திட வேண்டும்.

நிட்சேப நதி தென்காசி, காந்தி அஸ்தி நதி, தென்காசி நதி அழிவு, நதி ஆக்கிரமிப்பு தமிழ்நாடு, நிட்சேப நதி மீட்பு
தமிழ்நாடு நதி பாதுகாப்பு செய்திகள்
நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *